மலையக சிறுமி மரணம் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவு அறிக்கையை பொரளை பொலிஸில் உடனடியாக ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், ரிஷாட் பதியுதினின் வீட்டில் உயிரிழந்த 16 வயது சிறுமியை அழைத்து வந்த இடைத்தரகரின் வங்கிக் கணக்கு தகவல்களையும் பொரளை பொலிஸிற்கு பெற்றுக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
டயகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.