
அரசுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் அரசியல்வாதிகள் பதவி விலக வேண்டும் - சாணக்கியன்
இந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப முடியாது என தாங்கள் அன்றே எதிர்வு கூறியதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலைமையை பொறுப்பேற்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அரசாங்கத்தின் இந்த மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றில் இரண்டு பங்கு கரையோர பிரதேசத்தை வைத்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்களின் நலன் கருதி இதுவரை எரிபொருள் விலை அதிகரித்ததைப் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை. அன்றாடம் மீன்பிடிக்க சென்று சிறிதளவு மீனை பிடித்து விற்பனை செய்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி இவர்கள் ஏன் சிந்திக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (18) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.