
கொவிட் மரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை, முன்னர் போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.
அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்படும். அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடர, நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
கொவிட் ஒழிப்புக்கான விசேட குழு, இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்று கூடிய போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கொவிட் அல்லாத மரணங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதால், இறுதிக் கிரியைகளை நடத்துவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை பலரும் முன்வைத்தனர். இதன் மூலம், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார மற்றும் ஏனைய கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, கொவிட் காரணமாகவன்றி மரணிக்கின்றவர்களின் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.