
தாயை இழந்து துபாயில் தவித்த 10 மாத குழந்தை : திருச்சியில் உச்சி நுகர்ந்த தந்தை
துபாய்க்கு கைக்குழந்தையுடன் வேலைக்கு சென்ற பெண் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை தமிழக அரசு உதவியுடன் மீண்டும் தமிழகத்திற்கு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரியை சேர்ந்த வேலன் – பாரதி தம்பதிக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் குழந்தை விக்னேஷ் 13 வயதில் சிறுநீரக கோளாறால் இறந்தார்.
இந்த சோகத்தை தாங்க முடியாத தம்பதி குடும்ப வறுமை , பொருளாதாரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 மாத கைக்குழந்தையுடன் தாய் பாரதி வீட்டு வேலைக்காக துபாய் சென்றார்.
ஒரு மாதம் வீட்டு வேலை செய்த பாரதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் சிகிச்சை பலனின்றி பாரதி உயிரிழக்க, 10 மாத குழந்தை ஆதரவற்ற நிலையில் தவித்தது.
இதையறிந்த துபாய் நகர திமுக அமைப்பாளர் மீராமிதுன் அங்குள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றுள்ளார்.
கைக்குழந்தை தேவேஷ் பயணி ஒருவர் மூலம் நேற்று மாலை துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள தந்தை வேலனுக்கு தகவல் கொடுக்க, அவரும் திருச்சி விமான நிலையத்திற்கு தனது 2வது மகனுடன் வந்தார்.
குழந்தையை பார்த்ததும் ஆனந்த கண்ணீரில் வேலன் தனது மகனை உச்சி நுகர, காண்போர் கண்களை இந்த சம்பவம் கண்ணீர் குளமாக்கியது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.