
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து உதய கம்மன்பில கருத்து
வலுசக்தி அமைச்சராக தனக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உள்ள அனைத்து விடயங்களும் ஆதாரமற்றவை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வலு சக்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
"தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் பல பிழைகளை கொண்டுள்ளது. நிதி அமைச்சரின் இணக்கப்பாட்டின் படியே எரிபொருள் விலையை அதிகரிக்க முடியும். அமைச்சரவையின் அனுமதி தேவை இல்லை. நான் அமைச்சராக பதவியேற்றது 2020 ஆகஸ்ட் மாதம் எனவும், 2020 ஜனவரி மாதம் அல்ல எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இதில் கைச்சாத்திட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டம் தொடர்பில் ஒன்றும் தெரியாது என்பது இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை என்ற பெயரில் நம்பிக்கை பிரேரணை ஒன்றை கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்". என்றார்.