சசிகலா அடிப்படை உறுப்பினர் கூட இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. தமிழக அரசின் மெத்தனத்தால் கட்டுமானப் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
திமுக ஆட்சிப் பொறுப்புபேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனை அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. தடுப்பூசி இல்லை என்று அறிவிப்பு பலகை வைப்பதற்காகவா ஒரு அரசு செயல்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி கொலை செய்யப்பட்டிருந்தது எந்த அளவுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.
கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும். அதிமுகவை வளர்ச்சியை பார்த்து சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆடியோ வெளியிடுகிறார். அதிமுகவை உடைக்க சசிகலாவின் பிரித்தாலும் சூழ்ச்சி தோல்வியடைந்துவிட்டது. அவரின் எண்ணம் நிறைவேறாது. தேர்தலை பொறுத்தவரை அதிமுகவுக்கு வெற்றிகரமான தோல்விதான். அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே 3 சதவீத வாக்கு வித்தியாசம் தான். இபிஸ், ஓபிஸ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.