தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ம் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர் 31-ம் தேதியில் இருந்து 7-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
கடைசியாக அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14-ம் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கினை 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது ஜூன் 21-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.