சென்னையில் 97 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
சென்னையில் கடந்த 12-ம் தேதி அன்று 7,564 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. அது பின்னர் படிப்படியாக குறைந்தது.
கடந்த மாதம் 21-ந்தேதிக்கு பிறகு சென்னையில் கொரோனா தொற்று வேகமாக குறைந்தது. அன்று தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் அது மேலும் சரிந்தது.
இதனால் கடந்த மாதம் 31-ந்தேதி தினசரி பாதிப்பு 27,936-ஆக குறைந்து இருந்தது. சென்னையில் அன்று 2,596 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நோய் தொற்று மாநிலம் முழுவதும் குறைந்து வந்த நிலையில் சென்னையில் ஒவ்வொரு நாளும் நோயின் தாக்கம் குறைந்து கொண்டே சென்றது. இதனால் நோய் தொற்று கணிசமாக குறைந்தது. நேற்று தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. நேற்று சென்னையில் 989 பேருக்கு மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் 23,39,705 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 21,48,352 பேர் குணமடைந்துள்ளனர். 92 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் 5,24,085 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5,06,454 பேர் குணமடைந்துள்ளனர். 97 சதவீதம் அளவுக்கு கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 12-ம் தேதி 1,72,735 பேர் சிகிச்சையில் இருந்தனர். அப்போது சென்னையில் 40,613 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரப்படி 1,72,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருக்கிறது. 9,838 பேர் மட்டுமே தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.