பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா தற்கொலைக்கு காரணம்
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர் 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார்.
திருவான்மியூரை சேர்ந்த சித்ரா, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அறையில் வருங்கால கணவரான ஹேம்நாத் உடன் தங்கியிருந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார். தற்கொலை செய்த போது அறையில் கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்பது உறுதியாக தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே சித்ரா தற்கொலை வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறினார்கள்.
சென்னை திருவான்மியூரில் குடும்பத்துடன் வசித்து வரும் சித்ராவுக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஹேமநாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இந்த ஜோடிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. சித்ரா நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபலமான துணிக்கடைகள், தனியார் மருத்துவமனை பற்றிய விளம்பரம் ஆகியவற்றின் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் சித்ரா.