காசாவில் இன்றுமுதல் யுத்த நிறுத்தம்
காசாவில் இன்று காலை 8.30 மணி முதல் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தாரின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார்.
ஆனாலும் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படியும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களிற்காக காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலமாக கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் யுத்த நிறுத்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை குறித்த விபரங்கள் வெளியாகாத போதிலும் ஆறுவார கால ஆரம்பகட்ட யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளதாகவும் இதன் போது இஸ்ரேலிய படையினர் படிப்படியாக காசாவிலிருந்து விலக்கிக்கொள்ளப் படுவார்கள் என இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இக்காலப்பகுதியில் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுவதுடன் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளன.
இக் காலப் பகுதியில் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ள 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களும் மற்றும் சிறுவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
யுத்தநிறுத்தத்தின் 16 ஆவது நாள் இரண்டாவது கட்டத்தினை நடை முறைப்படுத்துவது குறித்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும் இதன்போது அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்வது நிரந்தர யுத்த நிறுத்தம் இஸ்ரேலிய படையினரை காசாவிலிருந்து முற்றாக விலக்கிக்கொள்வது குறித்து ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000