நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது.
இதேவேளை நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் இன்று காலை 6.35 மணிக்கு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கின.
ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் வந்த இடத்தை சுற்றியுள்ள கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.
இதேவேளை நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன.
அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை.
இதுகுறித்து சீன நாட்டு செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது: டிங்கி மாகாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தை சுற்றியுள்ள இடங்களில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளது.
காட்மாண்டுவில் உள்ள மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து ஒருவர் கூறுகையில், நான் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போது எனது கட்டில் குலுங்கியது. என் குழந்தைதான் கட்டிலை நகர்ந்துகிறதோ என நினைத்தேன். அதனால் நான் என்னவென பார்க்கவில்லை.
ஆனால் ஜன்னல்கள் ஆடியதை வைத்துதான் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன். உடனே என் குழந்தையையும் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு திறந்தவெளி மைதானத்திற்கு வந்துவிட்டேன் என்றார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட மையம் இமயமலைக்கு அருகே இருப்பதால் உயரமான மலைகள் குன்றுகள் சரிய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சீனாவில் 29 முறை நில அதிர்வுகள் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டதாக கூறுகிறது. இவை எல்லாம் இன்று ஏற்பட்ட நில அதிர்வைவிட குறைவானது என சீன ஊடகங்கள் கூறுகின்றன.
சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீனா சீன ஊடகமான சிசிடிவியிடம், "ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்" என்று கூறினார்.
5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், "பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது"என்று ஜியாங் கூறினார்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் வங்கதேசம், இந்தியா, பூடான், சீனாவிலும் எதிரொலித்ததாக சொல்லப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது. அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில், பீகார், டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதும் புவியியல் பிழைக் கோடுக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகளுக்கு உள்ளாகிறது.
2015 ஆம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது..