இளங்குமரன் MP அறியாமல் புலம்புகின்றார் - சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளர் தெரிவிப்பு
சட்டரீதியாகவே நாம் சுண்ணக்கல் “சல்லி” வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் செயற்பாடுகள் தொழில் முயற்சியாளர்களையும் முதலீட்டாளர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றும் செயற்பாடாக இருப்பது போன்று உணர்வதாக வடக்கின் பிரபல தொழிலதிபரும் சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளருமான பிரகதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிவந்த கனரக வாகனம் ஒன்றை மறித்து அந்த வாகனத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைதிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் அந்த நிறுவன உரிமையாளர் பிரகதீஷ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (04.01.2025) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -
தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சட்டரீதியான தரவுகளை அறியாது, உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுதும் வகையில் செயற்பட்டுள்ளார். இதனால் நேரடியாக பயன்பெறும் 180 தொழிலாளர்களுடன் 68 ஆண்டுகள் பாரம்பரியத்தை கெண்டுள்ள எமது வியாபார நிறுவனத்தின் நற்பெயருக்கு திட்டமிட்ட வகையில் சேறுபூசப்பட்டுள்ளது. இதையடுத்து நாம் நாளுடன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
கடந்த வியாழனன்று சாவகச்சேரி பொலிஸ் எல்லைக்குள் சுண்ணக்கல் சல்லியை திருமலைக்கு கொண்டுசென்ற தமது பார ஊர்தியை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் குறுக்கான நிறுத்தி இடைமறித்திருந்தார்.
அத்துடன் எமது நிறுவனத்தின் வாகன சாரதியிடம் ஆவணங்களை கேட்டு மிரட்டியதுடன் கொண்டு சென்ற பொருளை மூடியிருந்த போர்வையையையும் கிழித்து அடாவடித்தனம் செய்துள்ளார். ஆனால் சாரதி தம்மிடமிருந்த அனைத்து ஆவணங்களையும் காண்பித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசாரும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கறித்த சுண்ணக்கல் சட்டடரீதியாகவெ கொண்டு செல்லப்படுகின்றது என எடுத்துக் கூறியும் நாடாளுமன்ற உறுப்பினர் அது சட்டவிரோதம் என கூறி எமது பார ஊர்தி கொண்டுசென்ற சுண்ணக் கல்லுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதேநேரம் குறித்த வியாபாரத்தை நாம் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன் இந்த சுண்ணக்கல் சல்லிகளை கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக கறித்த சிமெந்து நிறுவனத்துக்கு சட்டரீதியாக விநியோகித்தும் வருகின்றோம்
கடந்த காலங்களிலும் எமது நிறுவனத்தின் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவாரால் சுமத்தப்பட்டது. ஆனாலும் அன்றிருந்த ஒருங்கிணைப்பு குழு நிர்வாகம் எமது வியாபார நடவடிக்கைகள் சரியானதென்று ஏற்றுக்கொண்டு அதை சட்டரீதியாக முன்னெடுக்க அனுமதி வழங்கியிருந்தது.
இதேநேரம் நாம் அகழப்படும் சுண்ணக்கல்லை நேரடியாக வியாபாரம் மேற்கொள்ளவில்லை. வலிவடக்கு மற்றும் வலி கிழக்கு பகுதியில் இராணுவக் கட்டப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களை தற்போது மக்கள் மீளவும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அத்துடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நிலங்களில் இந்த சுண்ணக்கல் பாறைகள் அகழப்பட வேண்டியதும் கட்டாயமாக இருக்கின்றது.
இதனால் குறித்த நிலங்களின் உரிமையாளர்கள் அனைத்து துறைசார் திணைக்களங்களிலும் அனுமதியை பெற்று கனரக வாகனங்கள் கொண்டு அனுமதியளிக்கப்பட்ட வரையறைக்கு ஏற்ப சுண்ணக் கற்களை பெரும் செலவு கொடுத்து அகழ்ந்து வருகின்றனர்.
இதேநேரம் இந்த சுண்ணக்கல் அகழ்வை அப்பகுதிகளை சேர்ந்த பல நூறு குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழிலாகவே காலாகாலமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
அவ்வாறு அகழப்படும் சுண்ணக் கற்களை காணி உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றார்கள். அதை அப்பகுதியில் இருக்கும் 65 இற்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள் (“கிறெசர்”) தமது தொழில் நடவடிக்கைக்கான அனைத்து அனுமதிகளையும் துறைசார் தரப்பினரிடம் பெற்று தமது ஆலைகளுக்கு கொண்டு சென்று உடைத்து தரம் பிரித்து விற்பனை செய்கின்றார்கள்.
இவ்வாறு விற்பனை செய்யும் சுண்ணக்கல் சல்லிகளையே நாம் கொள்வனவு செய்து திருகோணமலையிலுள்ள சிமெந்து ஆலைக்கு விற்பனை செய்து வருகின்றோம்.
அத்துடன் குறித்த சுண்ணக்கல் சல்லியை வீதியால் கொண்டு செல்லவோ அல்லது வியாபாரம் செய்யவோ எதுவித அனுமதியும் பெற தேவையில்லை என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு சான்றாக எமது வாகனங்கள் இரு தடவை நீதிமன்றங்கள் முன் நிறுத்தப்பட்டு அது சட்டரீதியானதென உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டும் உள்ளது.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விடயம் தொடர்பில் ஆராயாமால் அல்லது ஏதொவொரு காரணத்தை முன்னிறுத்தி இச்செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார் என உணர முடிகின்றது.
இவரது இந்த செயற்பாடானது யாழ் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களையும் முதலீட்டாளர்களையும் அச்சுறுத்துவது போன்றும் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசியல் தரப்பினர் கைவிட்டு முதலீடுகளையும் முதலீட்டாளர்களையும் ஊக்குகவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.