அரிசி பிரச்சினைக்கு காரணம் இதுவா - யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் குற்றச்சாட்டு
அரிசி பிரச்சினைக்கு உரியத் தீர்வை வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்படுவதாக அகில இலங்கை அரிசி தொழிற்துறையினரின் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை அரிசி தொழிற்துறையினர் சங்கத் தலைவர் நிஷாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூர் வகை அரிசி தம்மிடம் தாராளமாக இருப்பதாகவும் அதில் எந்தவித சிக்கலும் இல்லை எனவும் யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ந.ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சினை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலை காரணமாகவே தற்போது அரிசிக்கான பிரச்சினை நிலவுகின்றது.
கொழும்பில் கொள்வனவு செய்யும் அரிசியை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லும் போது அதற்குப் போக்குவரத்து கூலி உள்ளிட்ட செலவுகள் ஏற்படுகின்றன.
அதிகரித்த விலைக்கு அரிசியைக் கொண்டு சென்று எவ்வாறு அதனைக் கட்டுப்பாட்டு விலைக்குள் விற்பனை செய்ய முடியும் என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ந.ஜெகன் மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை அரசாங்கம் கவனத்திற்கு எடுத்துச் செயல்பட வேண்டும். அதேநேரம், சம்பா, கீரி சம்பா, வெள்ளை, பச்சை அரிசி விற்பனையிலிருந்து தாங்கள் தற்காலிகமாக விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ந.ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.