ரி20 சதம் குவித்தார் குசல் பெரேரா - 'கிவி'யுடனான கடைசிப் போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
நெல்சன், செக்ஸ்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (02) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 3 ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில் குசல் பெரேரா குவித்த சதத்தின் உதவியுடன் நியூஸிலாந்தை 7 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.
இந்தப் போட்டியில் 44 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த குசல் பெரேரா, இலங்கைக்கான அதிவேக சர்வதேச ரி 20 கிரிக்கெட் சதத்தைக் குவித்து மைல்கல் சாதனையை நிலைநாட்டினார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகலையில் 2011 இல் திலக்கரட்ன டில்ஷான் 55 பந்துகளில் குவித்த சதமே இலங்கைக்கான அதிவேக சர்வதேச ரி20 சதமாக இதற்கு முன்னர் இருந்தது.
இலங்கையின் இந்த வெற்றியில் குசல் பெரேராவின் அதிரடி சதமும் அணித் தலைவர் சரித் அசலன்கவின் சகலதுறை ஆட்டமும் முக்கிய பங்காற்றின.
சரித் அசலன்க தனது முதல் 3 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்திய போதிலும் கடைசி ஓவரில் 25 ஓட்டங்களைத் தாரைவார்த்தார்.
எவ்வாறாயினும் மற்றைய பந்துவீச்சாளர்கள் கடைசி 5 ஓவர்களை ஓரளவு கட்டுப்பாட்டுடன் வீசி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இதேநேரம் நியூஸிலாந்து மண்ணில் 2006 க்குப் பின்னர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.
இப் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டியபோதிலும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து கைப்பற்றியது.
கடைசிப் போட்டியில் இலங்கையின் வெற்றி இலகுவாக அமையவில்லை. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மிகத் திறமையாகவும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது. இந்த மொத்த எண்ணிக்கையானது இந்தத் தொடரில் ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
பெத்தும் நிஸ்ஸன்க (14), குசல் மெண்டிஸ் (22) ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் எதிர்பார்த்தளவு திறமையாக துடுப்பெடுத்தாடவில்லை.
மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெற்ற அவிஷ்க பெர்னாண்டோ 17 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து குசல் பெரேரா, சரித் அசலன்க ஆகிய இருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 45 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்த அணியை பலமான நிலையில் இட்டனர்.
குசல் பெரேரா 46 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களை விளாசினார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2013 இல் நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான குசல் பெரேரா கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து கன்னிச் சதத்தைக் குவித்தார். சரித் அசலன்க 24 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார்.
219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
டிம் ரொபின்சன், ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 44 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். டிம் ரொபின்சன் 37 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
9 ஆவது ஓவரில் பந்துவீச்சில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சரித் அசலன்க, தனது முதல் 3 ஓவர்களில் மார்க் செப்மன், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்து நியூஸிலாந்தின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
எவ்வாறாயினும் தனது கடைசி ஓவரில் 25 ஓட்டங்களை சரித் அசலன்க அள்ளிக் கொடுத்தார். அதில் டெரில் மிச்செல் 4 சிக்ஸ்களை விளாசியிருந்தார். ரச்சின் ரவிந்த்ரா 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய வரிசையில் டெரில் மிச்செல் 35 ஓட்டங்களையும் ஸக்கரி பௌல்க்ஸ் 21 ஆட்டம் இழக்காமல் ஓட்டங்களையும் மிச்செல் சென்ட்னர் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சரித் அசலன்க 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக குசல் பெரேரா; தொடர்நாயகனாக ஜேக்கப் டஃபியும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000