உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இலங்கைகு கிடைக்குமா வாய்ப்பு
எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி (ODI) கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பெப்ரவரி இரண்டாம் திகதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் பெப்ரவரி ஆறாம் திகதி முதல் 10 திகதி வரை நடைபெறும். ஒருநாள் போட்டி பகல்-இரவு போட்டியாக பெப்ரவரி 13 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் (WTC) ஒரு பகுதியாகும், தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் உறுதியான வெற்றி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்புகளை வலுப்படுத்தியுள்ளது.
இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு அணிக்கே வாய்ப்புள்ள நிலையில், இறுதிப் போட்டிக்குள் நுழைய மூன்று அணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகின்றது.
இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. எனினும் இந்திய அணியின் தகுதி தொடரின் சாதகமான முடிவுகளைப் பொறுத்தது.
இந்தியா இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென்றால், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்பதுடன் மேலும் அவுஸ்திரேலியாவின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது சாதகமான முடிவை எதிர்பார்க்க வேண்டும்.
தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வாய்ப்புகளை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், மெலிதான நம்பிக்கையில் உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியும், நியூசிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்ததும் இலங்கைக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
இருப்பினும், தென்னாப்பிரிக்காவிடம் 2-0 என்ற தோல்வி இலங்கை அணியின் வாய்ப்புகளை கணிசமாக பாதித்துள்ளது.
இந்நிலையில, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை அணி விளையாட வேண்டுமாக இருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
மேலும் சிட்னியில் நாளை ஆரம்பமாகும் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிய வேண்டும். இது இலங்கை அணியின் வாய்ப்பை மேலும் வலுப்படுத்தும்.
000