இஸ்ரேலுடனான மோதல் - பாதிக்கப்படக்கூடிய 55 இலங்கைத் தொழிலாளர்கள் கொண்ட குழுவை லெபனானில் இருந்து வெளியேற்ற ஏற்பாடு
இஸ்ரேலுடனான மோதல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய 55 இலங்கைத் தொழிலாளர்கள் கொண்ட குழுவை லெபனானில் இருந்து வெளியேற்ற தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டுள்ளது.
சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லெபனாலில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, 26 இலங்கையர்கள் கொண்ட குழு டிசம்பர் 04 ஆம் திகதியன்று கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
லெபனானில் உள்ள சர்வதேச குடியேற்ற அமைப்பின் உதவியைப் பாராட்டிய இலங்கைத் தூதரகம், லெபனானில் பதட்டமான சூழ்நிலை நிலவிய போதிலும், இலங்கையர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவுடனான அதன் போர் நிறுத்தம் இடைநிறுத்தப்பட்டால் லெபனானில் மீண்டும் போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது. இம்முறை தாக்குதல்கள் ஆழமாக இருக்கும் எனவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
போர்நிறுத்தம் உள்ள போதிலும், இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானில் தாக்குதல்களைத் தொடர்ந்தன. இஸ்ரேலிய-லெபனான் எல்லையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிட்டானி ஆற்றின் வடக்கே தாக்குதல்களை நிறுத்தவும், பின்வாங்கவும் ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா புறக்கணித்தமையால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு மீண்டும் போர் ஏற்படும் சூழல் இருப்பதால் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
000