உலக மண் தினம் இன்று
உலக மண் தினம் இன்று. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி உலக மண் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு உணவு மற்றும் விவசாய அமைப்பினரால் முன் மொழியப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, 2014 முதல் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
குறைந்து வரும் மண் வளம், மண் மாசுபாடுகளினால் எதிர்கால தலைமுறையினர் முகம் கொடுக்கப் போகும் சவால்களைக் கருத்தில்கொண்டே இத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
மனிதன் உயிர் வாழ காரணம் உணவு. அந்த உணவே மண்ணிலிருந்துதான் ஆரம்பமாகிறது. இப் பூமியில் பிறந்த மனிதன் உட்பட ஒவ்வொரு உயிரினமுமே மண்ணை நம்பியே உள்ளன.
இந்த மண் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், ஓர் அங்குலம் கனமுடைய மண் உருவாக ஆகக் குறைந்தது 500 வருடங்கள் ஆகுமாம்.
ஒரு கைப்பிடி மண்ணில் 45 சதவீதம் கனிமப் பொருட்கள், 25 சதவீதம் நீர், 25 சதவீதம் காற்று, 5 சதவீதம் நுண்ணுயிர்களும் உள்ளடங்கியுள்ளன.
தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான நைதரசன், பொஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மங்கனீசு, பொட்டாசியம் ஆகிய கனிமச் சத்துக்கள் மண்ணுக்குள் நிறைந்துள்ளன.
ஆய்வொன்றின்படி, ஒரு தேக்கரண்டி மண்ணில் 100 மில்லியன் முதல் 1 பில்லியன் வரையில் பக்டீரியாக்கள் உள்ளன.
மனிதனின் வாழ்வாதாரத்தின் அடிப்படையாக விளங்கும் மண் எத்தனைபேரால் காக்கப்படுகிறது?
இயற்கை பேரிடர்களினால் ஏற்படும் மண் அரிப்பு ஒரு புறம், மனிதர்களால் தோண்டப்படுதல் மறுபுறம். மற்றும் தேவையற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மண்ணின் தன்மையை இழக்கச் செய்கின்றன.
இதுபோன்ற செயற்பாடுகளினால் மண்ணிலுள்ள இலட்சக்கணக்கான உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இதனால் மண்ணும் அதன் உறுதித் தன்மையை இழக்கிறது.
மண் ஒரு வரையறுக்கப்பட்ட வளம் மற்றும் இயற்கை சூழலின் அடிப்படையான ஒரு அங்கமும் கூட. இவ்வாறிருக்கும்போது மண் வளத்தைக் காப்பது ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் மண்ணை கண்ணைப் போல் பார்க்கிறார்கள். மேலும் பூமித்தாய் தான் நம் வாழ்வாதாரத்துக்கு காரணம் என்று அதனைப் போற்றுகின்றனர். ஆனால், நாம் விவசாயிகளையும் மறந்து விடுகிறோம். மண்ணையும் காக்கத் தவறிவிடுகின்றோம்.
தற்போதைய காலகட்டத்தில் இது பெரிய விடயமாக இல்லாவிட்டாலும் நம் எதிர்கால சந்ததியினருக்கு மண் வாசம் எவ்வாறு இருக்கும் என்பது கூட தெரியாமல் போக வாய்ப்புள்ளது.
இறுதியாக மனிதன் தன் வாழக்கைப் பந்தயத்தை முடித்துக்கொண்டு மண்ணுக்குள்தான் சங்கமமாகின்றான். எனவே மனிதனின் இறுதிப் பயணம் வரையில் மண் நம்முடன் தான் துணை நிற்கிறது.
000