
மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (29) முற்பகல் அறிவுறுத்தினார்.
கப்பல் தீவிபத்தால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கண்டறிய உஸ்வெடகெய்யாவ கடற்கரை பகுதியில் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
கடல் சூழலைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். இது போன்ற பேரழிவுகளைச் சமாளிக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
கப்பல் தீ விபத்திற்குள்ளானமையால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் அன்றாட மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அறிவித்தார்.
கடல் மாசுபாட்டைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கடற்படை உள்ளிட்ட அனைவருக்கும் பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார்.