
ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஒரு முறையான திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் இணைத்து, விரிவான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஆரோக்கியமான உற்பத்தித்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் உரிமை “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை யதார்த்தமாக்குவதற்கு நாட்டின் விவசாய துறையை முழுமையாக சேதனப் பசளைக்கு மாற்றுவது ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும்.
எதிர்கால தலைமுறையின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் விவசாயிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் இலக்குகளை அடைந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதற்காக சேதன பசளை உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் பசளைகளின் அளவு குறித்து திருப்தியடையாத பட்சத்தில் உயர்தரம் வாய்ந்த சேதனப் பசளையை தேவையானளவு இறக்குமதி செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சேதனப் பசளை உற்பத்தியாளர்களுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பெரும்போகத்திற்கு முன்னர் கிராமிய மட்டத்தில் மண் வளத்தை பரிசோதித்து பயன்படுத்தப்பட வேண்டிய உரத்தின் அளவு குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.