தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் : முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கடந்த இரு தினங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நல்ல பலனை கொடுத்து வருகிறது. முழு ஊரடங்கின் பலன் அடுத்த 2, 3 நாட்களில் தெரிய வரும்.
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத நிகழ்வாக நேற்று ஒரே நாளில் 2,24,544 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசிதான் நமது காவல்காரனாக விளங்குகிறது. எனவே, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும், எனக் கூறினார்.