மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆசிரியர்
ஆன்-லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பள்ளி-கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு ‘ஆன்-லைன்’ மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை கே.கே.நகரில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ‘ஆன்-லைன்’ வழி கல்வியை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இவர், ‘ஆன்-லைன்’ மூலம் பாடம் நடத்தும்போது, ‘அரைகுறை அடை அணிந்து கொண்டு மாணவிகளின் உடை, அழகை வர்ணிப்பதாகவும், ‘வாட்ஸ்-அப்’-பில் ஆபாசமான முறையில் தகவல் அனுப்பியும், செல்போனில் அநாகரீகமான முறையில் பேசியும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டு வெளியானது.
மாணவர்-ஆசிரியர் என்ற புனிதமான உறவை தாண்டி, வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாணவிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ராஜகோபாலனை ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியும் நேரில் விசாரணை நடத்துவதற்காக நேற்று மதியம் பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு வருகை தந்தார்.
ஆனால் அவரது விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் போதுமான அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனை அவரது வீட்டில் இருந்து போலீசார் விசாரணைக்காக வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவரது ‘லேப்-டாப்’, செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆசிரியர் ராஜகோபாலன் மீது முறைப்படி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
ராஜகோபாலனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட பல குருஞ்செய்திகளையும், போட்டோக்களையும் சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்டுள்ளனர். அதில் பல மாணவிகளுக்கு செல்பி அனுப்புவது, சினிமா அல்லது வெளியில் செல்லலாம் என குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், ராஜகோபாலிடம் இது குறித்து விசாரித்த போது ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தன்னிடம் படித்த மாணவிகளிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபடுவதும், இரட்டை அர்த்ததில் பேசுவதையும் தான் ஜாலியாக தான் செய்து வந்ததாகவும், இது இந்தளவிற்கு விபரீதத்தில் முடியும் என தான் எதிர்பார்க்கவில்லை என வாக்குமூலத்தில் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.