நாளை மறுநாள் சந்திர கிரகணம்
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கிறோம். வருகிற 26-ஆம் தேதி மிக அரிதான சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 2.17 முதல் இரவு 7.19 மணி வரை நிகழ உள்ளது. ஆசியாவில் சில நாடுகள், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக்பெருங்கடல், இந்தியப்பெருங்கடல், அண்டார்டிகா பகுதியில் முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.
குறிப்பாக பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது, வளி மண்டல ஒளிச் சிதறல் காரணமாக ரத்தச்சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும். ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்த சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரிவதால் ரத்த நிலா என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த முழு சந்திர கிரகணம் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும். அனைத்து பகுதிகளிலும் காண முடியாது. அதேபோல் இந்த ஆண்டின் அடுத்த சந்திர கிரகணம் நவம்பர் மாதம் 19-ஆம் தேதி நிகழ இருக்கிறது என உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறினார்.