இந்தியாவில் கடந்த 27 நாட்களில் கொரோனாவால் 1 லட்சம் பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், கடந்த 27 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது நாடாக இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சுமார் 450 நாட்களாகியுள்ள நிலையில், கடந்த 27 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டனர். அதே காலகட்டத்தில் சுமார் 85.4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் முதல் 206 நாட்களில் 1 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து 1 லட்சம் பேர் உயிரிழப்பை எட்ட சரியாக 208 நாட்கள் எடுத்தது.
கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று 2 லட்சத்தை தொட்ட உயிரிழப்பு, தற்போது வெறும் 27 நாட்களில் 3 லட்சத்தை கடந்துள்ளது. மே மாதத்தின் முதல் 23 நாட்களில் மட்டும் 87 ஆயிரத்து 413 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 36 ஆயிரத்து 339 பேர் கொரோனாவின் கோரத்திற்கு உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 45 சதவீத மரணங்கள் பதிவாகி உள்ளது.