ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் பழக்கடைக்காரர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-கடலையூர் ரோடு சந்திப்பு பஸ் நிறுத்தம் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் முத்துபாண்டி என்பவர் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தனது கடையில் வியாபாரம் செய்கிறார். பின்னர் 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு செல்லும்போது, 5 வாழைப்பழத்தார்களை தனது கடையின் முன்பாக தொங்க விட்டு செல்கிறார்.
அதன் அருகில் ஒரு சிலேட்டில், ‘பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும், பழம் இலவசம், வீணாக்க வேண்டாம்’ என்று எழுதி வைத்துள்ளார். இதையடுத்து ஆதரவற்றோர், முதியோர்கள் அவரது கடையின் முன்பு தொங்கவிடப்பட்டு இருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு தங்களது பசியாற்றி செல்கிறார்கள். மேலும் கடையின் அருகில் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோர், முதியோர்களுக்கு முத்துபாண்டியின் பழக்கடை பசியை போக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.