ஜனாதிபதி தேர்தல் - எவ்வளவு செலவானாலும் வழங்கத் தயார் - திறைசேரி
ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து தேர்தலுக்கான செலவுகள் அதிகரித்தாலும் அத் தொகையை வழங்க திறைசேரி தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய தேர்தலுக்காக நிதி வழங்க திறைசேரி தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், பணப் புழக்கங்களுக்கிடையில் முரண்படாத வகையில் பணத்தை விடுவிப்பதற்கு பொருளாதாரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, தேர்தல் ஆணையாளர் அலுவலகம் சுமார் 08 பில்லியன் ரூபா அண்ணளவான மதிப்பீட்டை திறைசேரிக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள், வாக்குப்பெட்டி தயாரிப்பு போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்காகவும் திறைசேரி பணத்தை விடுவிக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தேர்தலுக்கான வேறு செலவுகள் மதிப்பிடப்பட்ட தொகைக்கு மேலதிகமாகஅதிகரித்தாலும், நிச்சயமற்ற செயற்பாடுகளுக்கு ஏற்ப தற்போது பணம் கையிருப்பில் உள்ளது.
இதனால் மேலதிக செலவுகள் தொடர்பில் பிரச்சினை ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 2019 தேர்தலை விட அதிகரித்தால் வாக்குச்சீட்டின் நீளத்தை அதிகரிக்க முடியாததால் சிஆர் (CR) பயிற்சிப் புத்தகத்தின் பக்கத்தைப் போன்று அச்சிட வேண்டியிருக்கும் என அரச அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 35 வேட்பாளர்கள் முன்னிலையாகி இருந்ததால் 26 அங்குல நீளமான வாக்குச் சீட்டு அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாக்குச் சீட்டு அச்சிடக்கூடிய அதிகபட்ச நீளம் 26 அங்குலம் என்றும் அதற்கு மேல் அச்சிட முடியாது என்றும் அவர் கூறினார். அச்சிடுவதற்காக அதே அளவு காகிதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு வாக்குச்சீட்டு பெரிதாக்கப்படுவதால் வாக்குப்பெட்டியில் போடக்கூடிய தாள்களின் எண்ணிக்கையும் குறையும் என்று அரச அச்சகர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், விண்ணப்பப் படிவங்கள் போன்றவற்றை அச்சிடும் பணிகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.