இலங்கை - இந்திய அணிகள் இடையிலான T-20 தொடரினைப் பறிகொடுத்த இலங்கை அணி
இலங்கை - இந்திய அணிகள் இடையிலான T-20 தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்தியா 7 விக்கெட்டுக்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இலங்கை - இந்திய அணிகள் மோதிய போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார்.
அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குசல் மெண்டிஸின் விக்கெட்டை 10 ஓட்டங்களுடன் இழந்த போதிலும் பின்னர் குசல் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க ஆகியோரது ஆட்டத்தோடு போட்டியில் முன்னேறியது.
இந்த நிலையில் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் குசல் பெரேரா அரைச்சதம் விளாசி இலங்கை அணியினை பலப்படுத்தினார்.
பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் மத்திய வரிசையில் தடுமாறி 20 ஓவர்களுக்கு இலங்கை அணியானது 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா அதிகபட்சமாக தன்னுடைய 14 ஆவது அரைச்சதத்தோடு 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகளோடு 53 ஓட்டங்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுக்களையும் அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த போது போட்டியில் மழை குறுக்கிட்டது.
மழை காரணமாக போட்டியின் வெற்றி இலக்கு 8 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் என டக்வெத் லூயிஸ் முறையில் தீர்மானிக்கப்பட்டதோடு, குறித்த வெற்றி இலக்கை இந்திய அணி 6.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களுடன் அடைந்தது.
இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த வீரர்களில் யஷாஷ்வி ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக ரவி பிஸ்னோய் தெரிவாகினார். இலங்கை இந்திய அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (30) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
000