ஆசிய கிண்ண கிரிக்கெட் - இந்தியாவை வீழ்த்தி புது சரித்திரம் படைத்த இலங்கை மகளிர் அணி
சமரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கை மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
நேற்று (28) நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் பிரபல இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி, ஆசியக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.
இதற்கு முன்னர் ஐந்து முறை (2004, 2005, 2006, 2008 மற்றும் 2022) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் இறுதிப்போட்டி வரை வந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை மகளிர் அணி, சம்பியன் பட்டத்தை வென்றது இதுவே முதல் தடவையாகும்.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீராங்கனைகளாக ஷபாலி வர்மா ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ஷபாலி வர்மா 16 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமா செத்ரி 9 ஓட்டங்களுடனும், அணித்தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்தினர். அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 10 பௌண்டறிகளுடன் 60 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த ரிச்சா கோஷ் மற்றும் பூஜா அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை மகளிர் அணி தரப்பில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்டுகளையும், உதேஷிகா ப்ரபோதானி, சச்சினி நிசன்சலா, சமரி அத்தபத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குணரட்ன - அணித்தலைவி சமரி அத்தபத்து ஆகியோர் ஆரம்பம் கொடுத்தனர். இதில் விஷ்மி குணரட்ன ஒரு ஓட்டத்துடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சமரி அத்தபத்து - ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைச் சதங்களை பதிவுசெய்தனர்.
இரண்டாவது விக்கெட்டிற்கு 87 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெற்ற நிலையில் 9 பௌண்டறிகள், 2 சிக்ஸர்கள் என 61 ஓட்டங்களை எடுத்திருந்த சமரி அத்தபத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கவிஷா டில்ஹாரியும் அபாரமாக விளையாட இலங்கை அணியின் வெற்றியும் உறுதியானது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ஷிதா சமரவிக்ரம 6 பௌண்டறிகள், 2 சிக்ஸர்கள் என 69 ஓட்டங்களையும், கவிஷா டில்ஹாரி ஒரு பௌண்டறி, 2 சிக்ஸர்கள் என 30 ஓட்டங்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தெடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மகளிர் அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது.
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தியாவை தவிர்த்து பங்களாதேஷ் மட்டுமே ஒருமுறை வெற்றி பெற்று இருந்தது. தற்போது இலங்கை அணி மூன்றாவதாக மகளிர் ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 9 மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர்களில் இந்தியா ஏழு முறையும், பங்களாதேஷ் மற்றும் இலங்கை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகி விருதை ஹர்ஷிதா சமரவிக்ரம தட்டிச் செல்ல, தொடர் நாயகி விருதை சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
000