ஜனாதிபதித் தேர்தலை 21 ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தயாராக இல்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் என்பது மக்களின் இறையாண்மையின் ஒரு பகுதி எனவும் அதனை மீற இடமளிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பின் 106 ஆவது சரத்தின் பிரகாரம் நாட்டில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
அதற்கு பூரண ஆதரவை வழங்குவது அனைவரினதும் முக்கிய கடமையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காவல்துறைமா அதிபரின் நியமனம் சட்டவிரோதமானது என்றும் அதற்குத் தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் கூறுகிறது. எனினும், இது சட்டபூர்வமானது என்று நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சபாநாயகருடனும் பிரதம நீதியரசருடனும் கலந்துரையாடி காவல்துறை மா அதிபர் நியமனத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும்.
எனவே சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழல் ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
000