சீனாவுடனான தமது பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு
சீனாவுடனான தமது பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சீன ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஒத்துழைப்பு காரணமாகக் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முதன்மையான திட்டங்களின் விரிவாக்கம் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகரம் முழுவதும் சீனாவின் முதலீடாகும். இலங்கை அதனை அங்கீகரித்துள்ளது. அத்துடன் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
இது முதலீட்டாளர்களுக்கு நன்மை பயப்பதுடன், முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் முதலீடுகளைப் பாதிக்காத வகையிலும் குறித்த சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான வரலாற்று வர்த்தக உறவுகளையும் எடுத்துரைத்த அவர், நாட்டின் மூலோபாய இருப்பிடம் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான நுழைவாயிலாக இலங்கையின் வகிபாகத்தை விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000