மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி – இன்று இந்தியாவை வீழ்த்துமா இலங்கை
பெண்களுக்கான ஆகியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணியும், இந்திய மகளிர் அணியும் தகுதி பெற்றுள்ளன.
இந்த இரு அணிகளும் போட்டியில் தோல்வி அடையாத இரு அணிகளாக இவ்வருடம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.
நடப்பு ஆசியக் கிண்ண தொடரில் இந்திய அணி சார்பில் நான்கு வீராங்கனைகள் அரைச்சதம் அடித்துள்ளனர்.
அதேபோல், சாமரி அத்தபத்து மற்றும் விஷ்மி குணரத்ன ஆகியோர் இலங்கை அணிக்காக இந்த ஆண்டு ஆசிய கிண்ணத்தில் அரைசதம் அடித்துள்ளனர்.
பந்து வீச்சில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முறையே 31 மற்றும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளன.
இதுவரை எட்டு மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன, இதில் இந்திய அணி ஒரு தடவை தவிர 07 தடவைகள் சம்பியனாகியுள்ளது.
இதன்படி 08 ஆவது ஆசிய கிண்ண வெற்றிக்காக இந்தியா களம் இறங்கவுள்ளதுடன், இலங்கை மகளிர் அணி தமது கன்னி ஆசிய கிண்ணத்தை வெல்லும் நோக்கில் இன்று களம் இறங்கவுள்ளது.
இந்த ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (28) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது