தேர்தல் சட்டங்களுக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது - அழுத்தங்களுக்கும் அடிபணிய போவதில்லை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவிப்பு
அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் என்பனவற்றுக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். இதனை தவிர்த்து பிற தரப்பினரது அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது. தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வெகுவிரைவில் வெளியிடுவோம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும், எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி வேட்பு மனுக்களை பொறுப்பேற்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை (26) முதல் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிதி அதிகாரியிடம் கட்டுப்பணத்தை செலுத்த முடியும். குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50000 ரூபாவும்,சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.
தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை ஏன் விரைவாக வெளியிடவில்லை. என்று பலர் கடந்த காலங்களில் கேள்வியெழுப்பினார்கள். தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.
அனைவருக்கும் சாதகமான வகையில் சனிக்கிழமையன்று வாக்கெடுப்பை நடத்த தீர்மானித்துள்ளோம். சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். முன்வைக்கப்பட்ட சகல குற்றச்சாட்டுக்களுக்கும் வர்த்தமானி ஊடாக பதிலளித்துள்ளோம்.
அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் என்பனவற்றுக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். இதனை தவிர்த்து பிற தரப்பினரது அழுத்தங்களுக்கு தலைகுனிய போவதில்லை. தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை (26) செயற்படுத்தப்படும்.
தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது. தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வெகுவிரைவில் வெளியிடுவோம்.
ஜனாதிபதித் தேர்தல் பணிகளை அரச அச்சகத் திணைக்களமும், தபால் திணைக்களமும் நேற்று வெள்ளிக்கிழமை (26) முதல் ஆரம்பித்துள்ளது. தேர்தல் பணிகளுக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஆணைக்குழுவுடன் ஒன்றிணைந்து செயற்படுகிறார். தேர்தல் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000