இட ஒதுக்கீட்டு முறையில் பாரபட்சம் - வங்களாதேஷில் வன்முறை - 39 மாணவர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு, அந்நாட்டு அரச வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
எனினும் இந்த இட ஒதுக்கீட்டு முறை பாரபட்சமாக உள்ளது எனத் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி மாணவர்களைக் கலைத்தனர்.
இந்த வன்முறையில் 39 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் போராட்டக்காரர்களால் பொதுஇடங்கள், சிறைச்சாலை, கட்டடங்கள் என பல பகுதிகளிலும் தீ வைக்கப்பட்டது.
பங்களாதேஷின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனைப் பயன்படுத்தி சிறையிலிருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
இதேவேளை டாக்காவில் அரச தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பின்னர் அரச தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு தீ வைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதவிர நேற்றுமுன்தினம் (18) பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை நடந்த போராட்டங்களில் 50ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
போராட்டம் காரணமாக பங்களாதேஷ் முழுவதும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் காலவரையின்றி மூடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பல நகரங்களில் இணையத் தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள்மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரனைட்களையும் காவல்துறையினர் உபயோகித்து வருகின்றனர். தலைநகரில் உள்ள தொடருந்து நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.
போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர எல்லைப் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000