ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பினை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் முழுமையான ஒத்துழைப்புக்களையும் கடமைகளையும் முன்னெடுக்குமாறு கோரி அரசாங்க அச்சகம், பொலிஸ், இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரத்தை தயாரிக்குமாறு மாவட்ட உதவி மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட உதவித் தேர்தல் ஆணையர்களுக்கு கிராம சேவை அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடிகளைத் தயார் செய்யுமாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் செம்டெம்பர் 17ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 16ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாரான நிலையிலேயே உள்ளது. ஏனைய திணைக்களங்களையும் தற்போது செயற்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை விடவும், இம்முறை பிரசார செலவீனம் உள்ளிட்ட விடயங்களையும், தேர்தல் சட்ட மீறல்களை தடுப்பதற்கான புதிய முன்னகர்வுகளையும் தேர்தல்கள் கண்காணிப்பு தரப்பினருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000