எமது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய கடற்படை வீரருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் - யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் புனித பிரகாஷ்
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஒரு துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடல் பகுதிக்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக அழித்து வருகின்றன.
இதன் காரணமாக நாம் கடற்படையினருக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைது செய்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலையில் நேற்றையதினம் திங்கட்கிழமை இரவு இந்திய இழுவைப் படகை கைது செய்ய முற்பட்டபோது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நமது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய அந்த கடற்படை வீரருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடற்படை வீரர் உயிரிழந்துள்ள நிலையில் எவர் பக்கமானாலும் உயிர் இழப்பை நாம் விரும்பவில்லை.
இந்திய மீனவர்களிடம் வினையமாக வேண்டிக்கொள்வது என்னவெனில் உங்கள் கடல் எல்லையைத் தாண்டி எங்கள் கடல் எல்லைக்கு வர வேண்டாம்.
அவ்வாறு நீங்கள் வருவதால் கடற்படையினர் உங்களை விரட்டுவதற்காக கடலில் போராட வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதன் காரணமாக தேவையற்ற சம்பவங்கள் கடலில் இடம்பெறுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000