கைத்தொழில் துறையை மீளக் கட்டியெழுப்ப சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளருக்கு சலுகைக் கடன் திட்டம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன
வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில் துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினருக்கும் தொழில் முயற்சியாலர்களுக்கும் சலுகைக் கடன்களை வழங்குவதற்காக 2,000 கோடி ரூபாவில் நான்கு கடன் வழங்கும் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
மிகக் குறைந்த வட்டி வீதத்துடன் இலகுவான நிபந்தனையின் கீழ், இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு ஆகியன இணைந்து நாட்டின் 16 முன்னணி வங்கிகள் ஊடாக இந்த நான்கு கடன் திட்டங்களில் இரண்டை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற சர்வதேச கைத்தொழில் கண்காட்சியுடனான மாநாட்டில், உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
200 ஊழியர்களுக்கு குறைவாக தொழில் புரியும் உற்பத்திக் கைத்தொழில் துறை மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் முதலாவது கடன் திட்டத்தில் ஆகக் குறைந்தது 150 இலட்சம் ரூபாவை கடனாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 7வீத வட்டி அறவிடப்படவுள்ளது
அத்துடன் பத்து வருடங்களில் கடனை மீள அறவிட எதிர்பார்க்கப்படுவதுடன் அதனை வழங்க ஆரம்பிப்பதற்காக ஒரு வருட கால அவகாசமும் வழங்கப்படவுள்ளது. இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் பிரிவில் 16 வங்கிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வங்கிக்கும் 750 மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவேளை, தற்போது இலங்கை கடன் தகவல்கள் பணியகத்தில் தடை செய்யப்பட்ட பட்டியலில் பெயர்களைக் கொண்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கும் குறைந்தபட்சம் 50 இலட்சம் ரூபா கடனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான வட்டி 8 வீதமாகும். அந்தக் கடனை மீள செலுத்துவதற்காக 05 வருடங்கள் வழங்கப்படுவதுடன் கடனை மீள செலுத்துவதை ஆரம்பிக்க மூன்று வருட கால அவகாசமும் வழங்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக கைத்தொழில் அமைச்சின் நேரடி நிதியத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி வழங்குவதற்கான திட்டம் smile மற்றும் e pend ஆகிய இரண்டு முறைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாத்து ஆரம்பிக்கப்படும்
இந்தத் திட்டங்களுக்கு 30 மில்லியன் ரூபா இதன் மூலம் வழங்கப்படுகிறது. அதற்காக 6.5வீத வட்டி அறுவிடப்படுவதுடன் கடனை மீள செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாகும். அத்துடன் சிறு வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 10 இலட்சம் ரூபா நிதியை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீள செலுத்தும் காலம் 10 வருடங்களாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த கடனை பெற்றுக் கொள்வதற்கு கைத்தொழில் அமைச்சின் பரிந்துரையை பெற்றுக் கொள்வது அவசியமானால், வார நாட்களில் ஐந்து தினங்களும் அதனை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000