நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே பிரதான நோக்கம் - ஜனாதிபதி ரணில்
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (22) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.
இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
இதன்போது மேலும் அவர் கூறுகையில் -
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளில் பாரியளவிலான விவசாய செயற்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். .
மேலும் இப்பகுதியில் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாரிய பணிகள் இங்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி திருகோணமலையை பிரதான ஏற்றுமதி பொருளாதா மையமாக மாற்ற முடியும்.
தொழிற்கல்வித்துறையின் சீர்திருத்தத்தின் மூலம் அதிகளவான இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க முடியும். மூன்று, நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களை நியமிக்க முடியாததால், பாடசாலைக் கல்வி மேம்பாட்டிற்காக, இன்று ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது.
நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அதற்கேற்ப, புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000