இலங்கையில் அணு மின்சார உற்பத்தி - முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டும் சீனா
இலங்கையின் அணு மின்சார உற்பத்தித்துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா (China) ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன் இலங்கை அணுசக்தி சபை, வருங்கால முதலீட்டாளர்களிடமிருந்து திட்டங்களை எதிர்பார்க்கிறது.
இந்தநிலையில், சீனாவின் தேசிய அணுசக்தி கழகத்தின் பிரதிநிதிகள், இது குறித்து கலந்துரையாட இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இலங்கையின் அணு ஆலைக்கான திட்டங்களை சமர்ப்பித்த அமைப்புகளில் சீனாவின் சி.என்.என்.சி நிறுவனமும் உள்ளடங்கியுள்ளது.
அது மாத்திரமன்றி, ரஸ்யாவின் ரோசாடோமை, பிரான்சின் லெக்ட்ரிகிட் டி பிரான்ஸ மற்றும் டென்மார்க்கின் சீபோர்க்ஆகிய அமைப்புக்களும் தமது திட்டங்களை சமர்ப்பித்துள்ளன.
இதற்கிடையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த திட்டத்துக்கமைய, அண்மையில், சர்வதேச அணுசக்தி நிறுவன நிபுணர்களின் குழு, ஏழு நாள் பாதுகாப்பு மதிப்பாய்வுகளை நடத்தியது.
இதன் மூலம், அணு மின் நிலையங்களை உருவாக்குவதற்கான சாத்தியமான தளங்களை, அந்த நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
இதனையடுத்து, வருங்கால முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்காக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர முயற்சிக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் அல்ட்ரா அணுசக்தி கழகம் மற்றும் கனடாவின் அணுசக்தி கனடா லிமிடெட் ஆகியவையும் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00