நட்டத்தில் இயங்கிய இ.போ.ச. கடந்த வருடம் 2,000 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது - திலும் அமுனுகம தெரிவிப்பு
திறைசேரியிலிருந்து நிதியைப் பெற்று தொடர்ச்சியாக இயங்கி வந்த இலங்கை போக்குவரத்து சபையானது, வரலாற்றில் முதல் தடவையாக கடந்த வருடத்தில் இலாபமீட்டி திறைசேரிக்கு நிதி வழங்கியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை கடந்த வருடத்தில் 2000 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கி யுள்ளதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பொற்காலம் என அணில் முனசிங்கவின் காலம் குறிப்பிடப்படுகிறது.
அதற்கு பின்னர் அடுத்து வரும் பொற்காலம் அமைச்சர் பந்துல குணவர்தனவின் காலத்திலேயே ஆரம்பமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றுள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பதவி உயர்வு, மற்றும் ஆட்சேர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இலங்கை போக்குவரத்து சபை ஒரு சிறந்த நிறுவனமாகும். நாட்டின் முப்படைகளுக்கு இரண்டாவதாக சிறந்த அணியாக, இலங்கை போக்குவரத்து சபையை குறிப்பிட முடியும்.
யுத்த காலத்திலும் கொவிட் காலத்திலும் சாதாரண மக்களுக்கும் படையினருக்கும் சிறந்த சேவைகளை வழங்கியதன் மூலம், இந் நிறுவனம் பெயர் பெற்ற நிறுவனமாக திகழ்கிறது.
அன்றாடம் திரட்டப்படும் 20 ரூபா நோட்டுக்களை சேர்த்து சம்பளம் வழங்கிய காலம் ஒன்றுண்டு. அவ்வாறு இயங்கிய இலங்கை போக்குவரத்து சபைதான் இன்று இந்தளவு முன்னேற்றமடைந்துள்ளது. இது பெருமைப்படக்கூடிய விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
000