இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு - மக்களுக்கு விடப்பட்டது முக்கிய அறிவிப்பு!
சில தசாப்தங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் தற்போது அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாமையினால் கடவுச்சீட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, தேசிய அடையாள அட்டைகளில் தெளிவற்ற புகைப்படங்கள், எண்கள் மற்றும் எழுத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் தேசிய அடையாள அட்டையை தயார் செய்ய வேண்டும்.
கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான அடையாளத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டையை முன்வைக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் கடவுச்சீட்டு வழங்குவதற்கு விண்ணப்பதாரரின் விண்ணப்ப படிவம், ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் வண்ண புகைப்படம், தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
பல விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த தேசிய அடையாள அட்டைக்கமைய, விண்ணப்பதாரரை உண்மையான விண்ணப்பதாரராக அங்கீகரிக்க முடியாததன் காரணத்தால் கடவுச்சீட்டை வெளியிட முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் தேசிய அடையாள அட்டைகள், புகைப்படங்கள், பிறப்புச் சான்றிதழ்கள் போன்றன குடிவரவு அமைப்பில் ஸ்கேன் செய்து புதுப்பிக்கப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000