இரண்டு நாள்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்
இரண்டு நாள்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் உரிய ஆலோசனைகளை பெறுமாறு தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய அதிகாரி, விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க அறிவுறுத்தியுள்ளார்
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சீரற்ற காலநிலையால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டெங்குவைத் தடுப்பதற்கான மிக அடிப்படையான வழி, நுளம்பு பரவலைத் தடுப்பதாகும். அதற்கு வீடுகள், பாடசாலைகள், பணியிடங்களில் நுளம்புகள் உருவாகும் இடங்களை அகற்றுவது பொது மக்களின் பொறுப்பாகும்.
மேலும், காய்ச்சல் ஏற்பட்டால், இரண்டு நாட்களுக்குள் அருகில் உள்ள வைத்தியரை அணுகி, உரிய ஆலோசனை பெற வேண்டும். காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமோல் மாத்திரையை மாத்திரம் உட்கொள்ள வேண்டும்.
இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதை டெங்கு நோயாகக் கருதுவது மிகவும் அவசியம். இந்த அறிகுறிகள் இருந்தால், முதலில் உடல் ரீதியாக ஓய்வெடுப்பது அவசியம்.
மேலும் நீர் மற்றும் கஞ்சி வகைகள், ஜீவனி, இளநீர் மற்றும் எலுமிச்சை சாறு போன்ற பானங்களைப் பருக வேண்டும். தேவையிருப்பின் வைத்தியசாலைக்குச் செல்லலாம்” இவ்வாறு விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
000