காலநிலை மாற்றம் குறித்து தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், அபிவிருத்தி கண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று உலக சுற்றாடல் தின நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
”உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 ஆம் திகதிமுதல் தேசிய சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டில் காடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடளாவிய ரீதியில் பல விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
சில அபிவிருத்தியடைந்த நாடுகள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த இலக்கை அடைய இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளன. மேலும் பெற்றோலிய உற்பத்தி செய்யும் நாடுகளும் உள்ளன.
இவற்றுக்கு மத்தியில் இலங்கை போன்ற சிறிய நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் சிக்கித் தவிக்கின்றன. அதற்கு நாம் இப்போது புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பாக நிதி அமைச்சில் தனிப் பிரிவை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துடன் சுற்றுச்சூழல் கொள்கைகளும் கிராமத்திற்கு செல்கிறது. எனவே இந்த வேலைத்திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்துவோம்.
இங்கு ஒரு முக்கிய விடயமாக காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தை நிறுவ நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அந்தப் பணிகள் முடிந்ததும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் அதனை சட்டப்பூர்வமாக்க எதிர்பார்க்கின்றோம்.
காலநிலை மாற்றத்திற்கு முகங்கொடுப்பது தொடர்பான சர்வதேச அளவிலான ஆராய்ச்சிக்காக இந்தப் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான நிதியைப் பெறுவதிலும் இன்று சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்த ஆண்டு யுக்ரேன் யுத்தத்துக்கு பயன்படுத்திய பணத்தைக் காலநிலை மாற்றத்துக்கு
ஈடுகொடுக்க வழங்கியிருந்தால், அந்தப் பணம் இரண்டு ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ரஷ்யா செலவழித்த பணம் இன்னும் கணக்கிடப்படவில்லை.
மேலும், காஸா போருக்குப் பயன்படுத்தப்பட்ட பணமும், அதற்காக அனுப்பப்பட்ட ஆயுதங்களின் செலவையும் இந்த நடவடிக்கைகளுக்கு வழங்கியிருந்தால், உலகையே மாற்ற முடியும். ஆனால் இந்தப் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே, வெப்பமண்டலப் பிரதேசம் என்ற வகையில் எமக்குத் தேவையான பணத்தை நாமே தேடிக்கொள்ள வேண்டும்.
அதன்படி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலைக் கையாள்வதில் இலங்கையின் வகிபாகம் பாரம்பரியத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை.
நாம் இன்னும் முன்னோக்கிச் சென்று பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கையிலும் இதனைச் சேர்க்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.