தேசிய பாடசாலைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்கள் - 2 வாரங்களில் நிரப்ப ஏற்பாடு - மாகாண பாடசாலைகளின் 6,000 வெற்றிடங்களுக்கும் விரைவில் நடவடிக்கை
தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கு நிலவும் 10,535 ஆசிரியர் வெற்றிடங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிரப்புவதுடன், தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதும் இதன் மூலம் நிறைவு செய்யப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வித் துறை தொடர்பில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் -
நாட்டில் 8,000 ஆசிரியருக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றன. மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள 6,000 ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய கொரோனா சூழலுக்குப் பின்னர் அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் இடம்பெற்ற போராட்டம் காரணமாக 2022 ஆம் ஆண்டு கல்வித்துறை உட்பட முழு நாடும் பாரிய பின்னடைவைக் கண்டது.
அந்த ஆண்டில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை நடத்துதல் மற்றும் வினைத்திறன் பரீட்சை வினாத்தாள் திருத்துதல், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆறு மாதத்துக்கும் மேலாக தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது
000