மக்களுக்கு ஆயுதங்களை வழங்க இஸ்ரேல் திட்டம்
எளிதில் இயக்கக் கூடியதும், ஆற்றல்மிக்கதான ஏகே 47, எம் 16 போன்ற 24 ஆயிரம் துப்பாக்கிகளைக் அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் அரசு கொள்முதல் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் தேசப் பாதுகாப்புத் துறை அமைச்சரான இடாமர் பென்-க்விர், இஸ்ரேலிய மக்களுக்குத் தாக்குதல் துப்பாக்கிகளைக் கொடுத்து, பாதுகாப்புப் படைகளை உருவாக்கி வருகிறார்.
இஸ்ரேலின் ஆயுத வேண்டுகோள் பற்றி அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிசீலித்து வருகின்றனர். வன்முறை அதிகரித்துவரும் மேற்குக் கரைப் பகுதி நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்களைத் துரத்திவிட முனையும் இஸ்ரேலிய குடியேற்றத்தினரிடமும் மக்கள் படையிடமும் இந்த ஆயுதங்கள் சென்றடையும் என்றும் சில அமெரிக்க அரசுத் துறை அலுவலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மூன்று தொகுப்புகளாக ஓரளவு தானியங்கி மற்றும் முற்றிலும் தானியங்கித் துப்பாக்கிகளுக்கு சுமார் 34 மில்லியன் டொலர் பெறுமதியுள்ள ஆயுதங்களுக்கு நேரடியாக அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களை இஸ்ரேல் தொடர்புகொண்டுள்ளது.
தேசிய காவல்துறைதான் இந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தப் போவதாக இஸ்ரேல் தெரிவித்தபோதிலும் ஆயுதங்களைக் கையாளத் தெரிந்த மக்களுக்கும் வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளதாக 'நியூ யார்க் டைம்ஸ்' தெரிவித்துள்ளது. குடியேற்றப் பகுதிகளின் மக்களுக்குத் துப்பாக்கிகளை வழங்கப் போவதாகக் காவல்துறைக்குப் பொறுப்பான தேசப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இடாமர் பென்-க்விர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
வெளியுறவுத் துறையிலுள்ள மனித உரிமைப் பிரச்சினைகளைக் கையாளும் அலுவலர்கள் இந்த விற்பனையில் தயக்கம் காட்டியபோதிலும், விரைவில் உயர் அலுவலர்கள் இந்த விற்பனைக்கு ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றும் அமெரிக்க அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளிலும் மேற்குக் கரையின் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் மக்களுக்கு ஆயுதங்களை வழங்குவதென திட்டமிட்டுள்ள நிலையில் தங்களுடைய ஆயுத இருப்பை அதிகரிக்க இஸ்ரேலிய காவல்துறை நினைக்கிறது என்றும் நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.