மன்னிப்புக் கோரினார் அம்பிட்டிய தேரர்
தமிழர்களை வெட்டுவேன் எனக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக காணொளி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினைப் பதிவுசெய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு, ஜயந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானம் கடந்த 21 ஆம் திகதி தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு எனது தாயின் சமாதியும் உள்ளதால், பொலிஸாருடன் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன். இதன்போது சிலர் என்னை தூண்டும் வகையில், காணொளிகளை எடுக்க ஆரம்பித்தமையால், நானும் கோபத்தில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தேன்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் நீதிமன்றத்திற்கு சென்றபோது, மயானத்தை தரைமட்டமாக்கிய தரப்பினர் குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு, மீண்டும் மயானத்தை அமைத்துத் தருவதாகவும் கூறியுள்ளனர்.
நானும், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றத்திடம் அறிவித்தேன். நான் கவலையுடன் தான் அன்று அவ்வாறு பேசினேன்.
இது இனவாதக் கருத்து கிடையாது. தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே சில நபர்கள் இவற்றை பயன்படுத்துகிறார்கள். இதனை அனைத்து மக்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.