மின்வெட்டை அமல்படுத்தும் செய்தி குறித்து மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் முக்கிய அறிவிப்பு
நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்திற்கொண்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
காலநிலை மாற்றங்களால் நீர் மின் உற்பத்திக்கு ஏற்படும் தடைகளைக் கருத்திற்கொண்டு அடுத்த இரண்டு வருடங்களில், நாடு பூராகவும் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்குத் தேவையான மின் உற்பத்திக்கான மாற்று வழிமுறைகளைக் கையாள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
நீர்ப்பாசன திணைக்களத்துடன் கலந்துரையாடி நாம் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அதன்படி, நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதுடன், வழங்க இயலுமான கொள்ளளவு நீரை, சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து விநியோகிக்கவும், அவ்வாறு விநயோகிக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தியை செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.