மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்திப்பிரிவு, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவை இணைந்து நடாத்திய மாபெரும் தொழிற்சந்தை.
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்திப்பிரிவு, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவை இணைந்து You-lead செயற்திட்டத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகம் 2 ல் சிறப்புற முன்னெடுக்கப்பட்டது.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.நிகழ்வில் தலைமையேற்று நடாத்திய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் அவர்கள் உரையாற்றுகையில்.........தொழில் வழிகாட்டல் என்பது மிகவும் முக்கியமானது அதாவது இளமைப் பருவத்தில் தமது எதிர்கால நோக்கி பயணிக்கின்ற போது சரியான வழிகாட்டலோடு செல்லுகின்ற போது தான் அவர்கள் தமது இலக்கை அடைய முடியும்.உண்மையிலேயே அவர்களிடம் இருக்கின்ற திறமைகளை அடையாளம் கண்டு அத்திறமைகளுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான துறைகளுக்கு வழிகாட்டுவதன் ஊடாக இளைஞர் யுவதிகள் எதிர்காலத்திலே சிறந்த ஒரு பிரஜைகளாக வருவதற்கு வழிவகுக்கும். அந்த அடிப்படையிலே நமது மாவட்ட செயலகத்திலேயே கடமை ஆற்றுகின்ற திறன் விருத்தி உத்தியோகத்தர்கள் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டுதல்களை அன்றாடம் செய்து வருகின்றார்கள்.இருந்த போதிலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மட்டுப்பாடுகள் காரணமாகவும் ஏனைய பிரச்சினைகள் காரணமாகவும் அவற்றை முழுமையாக அடைகின்றோமா என்பது தொடர்பில் எமக்கு இருக்கின்ற ஐயப்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் முகமாக பரந்துபட்ட அடிப்படையில் எல்லா திணைக்களங்களையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்வது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் பெருவிருப்பாகும்.அந்த அடிப்படையில் மூண்றாம்நிலைக் கல்வி தொழிற்கல்வி தொடர்பாக மாவட்டம் மட்ட செயற்பாடுகளை ஒருங்கிணைக்கின்ற பணியானது அரசாங்க அதிபர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்த நோக்கத்திற்காக பல கலந்துரையாடல்களை நடாத்தி அந்தந்த நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கி வருகின்றார்.அந்த வகையில் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற You-lead என்கின்ற செயற்திட்டத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களும் மாவட்ட மட்டத்தில் இப்பணியினை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர். அதற்கு அமைவாகவே இன்றைய நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் தனது உரையில் குறிப்பிடுகையில் .........கிளிநொச்சி மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தகவல்களின்படி 2400க்கும் மேற்பட்ட தொழில் தேடுனர்கள் இருக்கின்றார்கள்.இத்தொகையானது மாவட்ட சனத்தொகையோடு ஒப்பிடும் பொழுது குறைவான தோற்றப்பாட்டையே தருகின்றது.காரணம் மனிதவள வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவு செய்த தொழில் தேடுனர்களின் தொகையை அதுவாகும்.இந்நிலையில் உராய்வின் மூலம் வேலையின்மை,வேலையில் நாட்டமின்மை,அது தொடர்பான விழிப்புணர்வின்மை போன்றவை காரணமாக வேலையின்மை வீதமானது அதிகரித்த ஒன்றாகவே காணப்படுவது நிதர்சனமாகும்.இந்நிலைமையில் இன்றைய இந்த தொழிற்சந்தை நிகழ்வானது தொழில் தேடுனர்களுக்கு அவர்களது வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.மேலும் நிகழ்வின் ஏற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள்,உதவிப்பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,நிதி அனுசரணை வழங்கிய You-lead செயற்திட்ட உத்தியோகத்தர்கள்,ஊடக அனுசரணை வழங்கிய ஊடகவியலாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார்.இந்நிகழ்வில் அரச, அரசசார்பற்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழில் வாய்ப்பினை வழங்கும் பொருட்டு தமது செயற்பாடுகள் தொடர்பான விடயங்களையும் தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளையும் தொழில் தேடுனர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.