நிரந்தர பணி வழங்க கோரி ஒப்பந்த செவிலியர்கள் நாளை கோட்டை நோக்கி பேரணி
கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 6,282 நர்சுகள் தற்காலிக முறையில் ஒப்பந்த நர்சுகளாக நியமிக்கப்பட்டனர். அதில், 3000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி 810 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீதமிருந்த 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீட்டிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி பாதுகாப்பு, நிரந்தர பணி கோரி தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
எம்.ஆர்.பி. கொரோனா செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.ராஜேஷ், "கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்த பணி தேவையில்லை. பணி பாதுகாப்பு, நிரந்தர பணிதான் வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக நாளை (12ம் தேதி) கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம்" என்றார்.