கவர்னர் உரையாற்றியதற்கு சட்டசபை வருத்தத்தை பதிவு செய்தது - நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விளக்கம்
சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையாற்றிய பிறகு அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உறுப்பினர்கள் பேசுவார்கள். இதுதான் காலகாலமாக நடந்து வரும் நடைமுறை. சட்டசபையில் கவர்னர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்னார் முன்மொழிவார் என்று மட்டும் நிகழ்ச்சி நிரலை சட்டசபை செயலாளர் அனுப்புவார். ஆனால் இந்த முறை கவர்னர் சில பகுதிகளை தவிர்த்து பேசியது சர்ச்சையானது. இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எழுந்து ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதில் கவர்னர் தவிர்த்து வாசித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று அறிவித்தார்.
இந்த நிலையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது. அதில் கூறி இருந்ததாவது:-
'தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு, கவர்னரால் இசைவளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் கவர்னர் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறது.
பேரவையின் மாண்பினைப் போற்றிடும் வகையில், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் நாளன்று பேரவையில் பதிவு செய்யப்பட்ட கவர்னரின் பேருரைக்கு இப்பேரவை உறுப்பினர்கள் நன்றியுடையவர்களாவர். இந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.