தாய்லாந்தில் தற்காலிகமாக தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் மக்கள் கிளர்ச்சி வெடித்ததையடுத்து, சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் ஏறத்தாழ ஒரு மாதம் காலம் கோத்தபய ராஜபக்சே தங்கியிருந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று வெளியேறினார். அவருக்கு வழங்கப்பட்ட சமூக வருகை அனுமதி காலாவதியானதால் வெளியேறியதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார். தற்காலிகமாகத் தாய்லாந்தில் தங்க அனுமதியளித்துள்ள அந்நாட்டு அரசு, அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம், அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. கோத்தபய ராஜபக்சேவுக்கு தாய்லாந்து வருவதில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அந்நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.