வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பந்துல குணவர்தன வழங்கிய வாக்குறுதி
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் பாரிய சேதங்களை எதிர்க்கொண்டுள்ளது. அத்தோடு, தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தின் அள்ளுண்டு செல்லப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக பெருந்தெருக்கள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாவலப்பட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக இடிந்து விழுந்த நாவலப்பிட்டி - இங்குருஓயா பாலத்தை இதன்போது அவர் பார்வையிட்டதோடு, வட்டவளை ஹைட்ரி தோட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் அழைப்பின் பேரில் அப்பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்தன, நாவலப்பிட்டி - இங்குரு ஓயா பாலம் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக இங்குரு ஓயா பகுதிக்கு செல்ல முடியாத நிலை குறித்து மகக்ளிடம் கேட்டறிந்தார்.
இந்த விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, நாவலப்பிட்டி பிரதேசமே வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தினால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த மக்களின் பல வீடுகள் வெள்ளத்தினால் அழிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.